Thursday, November 29, 2007

திராவிடம்தான் எங்கள் கலாச்சாரம் - மமி யமதா (ஜப்பான்)

சமீபத்தில் சாகித்ய அகாடமி நடத்திய எழுத்தாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் ஜப்பானிய எழுத்தாளர் மமியமதா. உற்சாகமான அதிகாலை பொழுதில் சன்னமான சிலிர் காற்று நம்மை வருட நுங்கம்பாக்கம் கௌதம் மெனார் ஹோட்டலில் தங்கி இருந்த அவரை சந்தித்தோம்.
47 வயதை தாண்டிவிட்ட மமியமதா ஜப்பானியருக்கே செல்லுபடியாகக் கூடிய சுறுசுறுப்புடன் பேசினார்.

‘‘இரண்டாம் உலகப் போர் நிகழ்வதற்கு முன்னால் எங்களின் சமூக அமைப்பிற்குள் பிரமிடு வடிவிலான சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிலவின. மேல் நிலையில் சாமுராய் வகுப்பினர் இருந்தார்கள். அதற்கடுத்த நிலையில் விவசாயிகள், அதற்குக் கீழாக வணிகர்கள், அதற்கும் அடிமட்டத்தில் இரண்டு சாதிப்பிரிவினர்கள் வாழ்ந்தார்கள்.
எவ்வளவுதான் செல்வந்தர்களாக கீழ் படி நிலையில் உள்ளவர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் சாமுராய் ஆக முடியாது. நாட்டிற்காக பணியாற்றும் இராணுவத்தில்கூட சேர முடியாது. நாட்டின் கௌரவமான பதவிகளுக்கு எல்லாம் சாமுராய் வகுப்பினர்கள்தான் செல்ல முடியும் என்ற ஒரு நிலையும் வழக்கமும் இருந்தது. சாமுராய் என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தினர் எவ்வளவு பரம ஏழையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் அவர்தான் சமூகத்தில் உசத்தியாகக் கருதப்படுவார். இந்த மாதிரியான படிநிலைகள் இரண்டாம் உலகப் போருக்கு _ அதாவது 1946_க்குப் பின்பு முற்றிலுமாக உடைந்தன.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் எங்கள் நாட்டின் மீது நடந்த போர் எங்களுக்கு வேறு மாதிரியான சமூக விடுதலையை வழங்கி இருக்கிறது’’ என்றவர் தொடர்ந்தார்.
‘‘எல்லோரும் நினைப்பது போல சீன எழுத்தும், எங்களின் எழுத்தும் ஒன்றானவை அல்ல. வாக்கிய அமைப்பிலிருந்து உச்சரிப்பு முறை, இலக்கண அமைப்பு எல்லாமே வேறு வேறானது.
திராவிட மொழியின் வாக்கிய அமைப்பும் எங்களின் வாக்கிய அமைப்பும் ஒன்றானவை. எங்களின் கலாசாரத்திற்கும் திராவிடக் கலா சாரத்திற்கும் பல்வேறு மட்டங்களில் ஒற்றுமை இருக்கிறது. திராவிடக் கலாசாரத்தின் நீட்சியாக வந்ததுதான் ஜப்பானிய கலாசாரம் என்று உறுதியாக நம்புபவள் நான்’’ என்றார்.
‘உங்களின் நாட்டில் ரஜினி நடித்த ‘முத்து’ படம் சக்கைப் போடு போட்டதாமே?’ என்றோம்.
‘‘ஒரே மாதிரியான படங்களையே பார்த்துப் பார்த்து சலித்துப் போன எங்கள் மக்களுக்கு அப்படம் முற்றிலும் மசாலாத்தனமான படமாகத் தெரிந்தபோது ஏதோ புதுவிதமாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட்டுப் போய் பார்த்தார்கள். ரஜினியின் ஒரு படம் மட்டும்தானே எங்கள் நாட்டில் சக்கைப்போடு போட்டது. பிறகு வந்த படங்கள் ஓடவில்லையே? அது சரி, உங்களால் எப்படி ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு இரண்டு மணி நேரம் சினிமா பார்க்க முடிகிறது? நிச்சயமாக எங்களால் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்காரவே முடியாது. டி.வி.டி. வாங்கிக் கொண்டுபோய் வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டே அன்றைய வேலைகளைச் செய்து கொண்டே இருப்போம்’’ என்கிறார் மமி யமதா. மமி என்றால் அழகு என்று பொருளாம்..

நன்றி: குமுதம்