Friday, September 15, 2006

காலமர சல்லாபி

(உரைநடைக் கவிதை)

1.

அகண்ட பாறை விளிம்பிலிந்து மெல்லவிழுகிறது நிராதரவற்ற ஒரு சல்லாபியின் காலம். கரும்பாறை போல் இறுகிய அவனது நிலங்கள் மறுபடியும் தாகத்திற்கு வாய்பிளந்து கேவலிடும் காட்சியை அவன் மலை உச்சி மீதிருந்து கிரகித்துக்கொண்டிந்தான். காலத்தின் பெரும் பசியைத் தணிக்க உள்ளிறங்கிச் செல்கிறது ஒரு கோப்பை பொருமானமற்ற அவனது சிறுநீர்.

2.

தணிக்க இயலாத காலப்பசிக்குப் புல்லறுக்க ஒரு வயோதியைக் கூலிக்கு அமர்த்தினான் சல்லாபி.கூடை சுமந்து வருபவள் காலத்தைத் தன் சூம்பிய விரல்களால் எண்ணினாள். அவளது விரலில் சுழன்று சுழன்று விளையாடுகிறது காலத்தின் அடவணை.காலப்பசிக்குப் புல்லறுக்க வந்தவளின் தோட்டத்தில்இச்சமயம் விளைச்சல் வேறு இல்லை. அவளது கூடைக்குள்ளிருந்து அறுவடை செய்தபடி மேய்ப்புநிலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது காலம்.

3.

பாதசாரிகளின் ஆவலுக்கு சல்லாபியின்காலமரம் உற்சாகத்தைக் கனிகளாக்கித் தருகிறது. குலுங்கிக் குலுங்கிக் கொட்டுகிறதுபழத்தை, காலமரம். பழத்தின் ரசத்தை உண்ட சாரிகள் சாவகாசமாகத் திருபுகிறார்கள் அகாலத்தினுள்ளாக.

4.

பாதசாரிகள் சுவைத்து உண்டெறியும்காலத்தின் கொட்டைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன காலமரத்தின்அடிவேர்களில்.

5.

காலம் ஒரு பெரும்பாறையாக உருண்டுஉருள்கிறது. சல்லாபியும்-காலமும் அதன்மேல் தவம்புரிகிறார்கள். பாறையினுள் சுழன்றபடிகவனிக்கிறது மற்றொருவனின் காலம்.

6.

எல்லாவிதமான நாட்காட்டிகளிலும்,கடிகாரங்களிலும் வாழ்ந்து அலுத்துப்போன காலம் வழமைக்கு மாறாய்ச் சுழலஆரம்பிக்கிறது மணிக்காட்டியின் எதிர் திசை வரிசையில் நின்று.

7.

அடிமரத்தின் விதைகள் விருட்சங்களாக உயர்ந்துக்கிளம்பி சல்லாபியின் தவப்பாறையைத் தொட்டது.அளவிட்டுப் பார்த்து ஆறுதல்கொண்டான் சல்லாபி. காலத்தின் அளவீடுகளை மறுமுறை ஏந்தலாயின சல்லாபியின் கைகள்.

No comments: